அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் ஐந்து மாடிக் கட்டடம்! வெள்ளவத்தை அனர்த்தத்தின் பின்னணி

167

வெள்ளவத்தையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தற்போது வரையிலும் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில்,கட்டடம் சரிந்து விழுந்தது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பலதரப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும்,கொழும்பு மாநகர சபையிடம் குறித்த கட்டட நிர்மாணத்தின் தர நிர்ணயம் குறித்து,நிர்மாணிப்பாளர்கள் அங்கீகாரம் பெற்றிருந்தார்களா ? என்பதும் சந்தேகமாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்த அதிகாரிகளும் உடைந்து விழுந்த ஐந்து மாடி கட்டடத்தை பார்வையிடச் சென்றுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் நேற்றிரவு குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதனுடன் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனமே, தரமற்ற நிலையில் நிர்மாணிக்கப்படும் கட்டங்களுக்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அனுர பிரியதர்ஷன யாப்பா இதன் போது கூறியுள்ளார்.

இதற்கிடையில், சிக்குண்டுள்ள ஏனைய இரண்டு நபர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இராணுவத்தினர்,விமானப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் பிரிவுகளின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments