இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியுடன் ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்

398

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி முதன்முறையாக வென்றுள்ளது. இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதிய பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இதுவரையில் நடைபெற்ற உலக்கிண்ணம் மற்றும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களில் இந்தியாவிடம் தோல்விகளையே சந்தித்து வந்த பாகிஸ்தான் அணி முதன் முறையாக இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.

குறித்த இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், நான்கு விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஃபகர் ஷமாம் அவரது கன்னிச் சதத்தினைப் பதிவு செய்து 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அவரைத் தவிர அசார் அலி 59 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய மொஹம்மட் ஹாபீஸ் 57 ஓட்டங்களையும், பாபர் அசாம் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, கேதர் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினை வீழ்த்தினர். 339 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது.

ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ரோஹித் சர்மாவை இழந்த இந்திய அணி, 6 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நம்பிக்கைக்குரிய வீரர் விராட் கோஹ்லியையும் இழந்தது.

தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கட்டுகளை இழந்த இந்திய அணி 72 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகள் என்று மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது.

இதன்போது, ஜோடி சேர்ந்த பாண்டியா, ஜடேஜா ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முற்பட்ட போதிலும், அது சாத்தியப்படவில்லை.

அதிரடியால் மிரட்டிய பாண்டியா மொத்த ஓட்டங்கள் 152ஆக இந்த போது 43 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

இவ்விருவரும் தங்களுக்கிடையில் 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்த இந்திய அணி இறுதியில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் இளம் வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான் அணி முதன் முறையாக ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்று சாதித்துள்ளது.

அத்துடன்,உலக்கிண்ணம் மற்றும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களில் இந்தியாவை ஒருமுறையேனும் வெற்றி பெற்றிருக்காத பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது.

Facebook Comments