பாதிப்பிலிருந்து மீள மழைக்காக காத்திருக்கும் கிளிநொச்சி மக்கள்!!

216

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள நல்லூர் பல்லவராயன்கட்டு குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை பண்ணப்பட்ட 321 ஏக்கர் நெற்செய்கை அழிவுறும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பிரதேச மக்கள் குறிப்பிடுகையில்,

மாவட்டத்தின் மூன்றாவது நீர்ப்பாசனக் குளமாக கருதப்படும் பல்லவராயன்கட்டு குளத்தின் கீழ் 400 ஏக்கர் வரை செய்கை பயிர்ச்செய்கை பண்ணப்படுகின்றது.

இவ்வருட சிறுபோகம் 321 ஏக்கர் வரை மேற்கொள்வதற்கு நீர்ப்பாசன திணைக்களம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் தற்போது குளத்தில் நீர்மட்டம் மிகவும் குறைவான நிலையில் உள்ளமையால் சிறுபோக செய்கையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குளத்தில் நீர் முற்றாக வற்றியுள்ள நிலையில் செய்கை பண்ணப்பட்ட சுமார் 300 ஏக்கர் வரையான நெற்செய்கை அழிவுறும் அபாய நிலையில் உள்ளது.

வங்கி கடன், நகைகளை ஈடு வைத்து மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கையானது கடும் வரட்சி, திட்டமிடப்படாத செய்கைக்கான அனுமதி ஆகியவற்றினால் பாரிய இழப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளமையால் கிணற்று நீர்மட்டமும் விரைந்து குறைவடைந்து வருகின்றது. விவசாயிகள், இதன் காரணமாக 300 குடும்பங்கள் வரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பாரிய எதிர்பார்ப்புடன் செய்கை செய்யப்பட்ட சிறுபோகம் நீரில்லாமையால் முழுமையாக கைவிடப்படும் நிலை காணப்படுகின்றமையால் தமக்கான நட்ட ஈட்டினை பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த குளத்தின் கீழ் செய்யப்படும் சிறுபோக செய்கையை பாதுகாப்பதற்காக அக்கராயன் குளத்திலிருந்து நீர் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்ற போதிலும், இவ்வருடம் குறித்த குளத்திலும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையால் நீர் பெற்றுக்கொள்ளுதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் செய்கை பண்ணப்பட்ட 321 ஏக்கர் நெற்செய்கை முழுமையாக பாதிக்கப்படும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு மழை வீழ்ச்சி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு என விவசாயிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாமை கவலை அளிப்பதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

 

Facebook Comments