யாழில் தேங்காயின் விலையில் திடீர் வீழ்ச்சி!!!

644

யாழ். மாவட்டத்தில் தேங்காயின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். குடாநாட்டிற்கு பெருமளவு தேங்காய்கள் வெளி மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதியாகின்றமையே விலையின் வீழ்ச்சிக்கு காரணமென வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் 55 ரூபா முதல் 60 ரூபாவாகவும், 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நடுத்தரத் தேங்காய் 45 ரூபாவாகவும், 40 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சிறிய தேங்காய் 30 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது தேங்காய் பருவ காலமாகையால் கொடிகாமம், பளை போன்ற இடங்களிலிருந்தும், புத்தளம், குருநாகல் போன்ற மாவட்டங்களிலிருந்தும் யாழ். குடாநாட்டின் சந்தைகளுக்கு தேங்காய்களின் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேங்காய்களின் வரத்து அதிகரித்துள்ள போதிலும் தேங்காய்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால் தமது வியாபாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் வியாபாரிகள் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் தேங்காய் ஏற்றுமதியை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook Comments